Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com

Ninaivodai

‘தோட்டியின் மகன்’ தமிழுக்கு வந்த கதை  பக்கம் 1 2 3

தோழர்களுக்குக்கூடத் ‘தோட்டியின் மகன்’ என்ற நாவலின் தலைப்பு வெளிப்படையாகச் சொல்ல இயலாத அந்நிய உணர் வைத்தான் முதலில் தந்தது. அவர்களுடைய இலக்கிய நம்பிக்கைகள் அவர்களுடைய உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ள இடம் தருவதாகவும் இருக்கவில்லை.

அன்று ஒரு முதிய தோழருக்கும் எனக்கும் நடந்த சம்பாஷணையின் சாராம்சம் பல தோழர் களுடைய அன்றைய மனநிலையைக் காட்டக்கூடியது.

‘மலையாளத்திலும் தோட்டியின் மகன் என்றே தலைப்பா?’ என்று கேட்டார் அந்த முதிய தோழர்.

‘ஆமாம்’ என்றேன்.

சில கணங்கள் மௌனம். ‘வாங்கிப் படிக்கிறாங்களா?’

‘நிறைய.’

‘முழுக்கவும் தோட்டிகள்தான் வாராங்களா?’

‘அநேகமாக அவங்கதான்.’

‘காதல் உண்டா?’

‘உண்டு.’

‘காதலிப்பவளும் தோட்டிச்சியா?’

‘ஆமாம்.’

‘அவங்க பாக்கற வேலைவெட்டி பத்தியெல்லாம் சொல்றாரா?’

‘சொல்றார்.’

‘ஒண்ணுவிடாம?’

‘ஒண்ணுவிடாம.’

‘குடும்பத்தைப் பத்தி?’

‘சொல்றார்.’

‘தமிழ்ல தலைப்பை மாத்திப்புட்டா என்ன, தோழர்?’

தோழர் கேட்ட கடைசிக் கேள்வி கவலையைத் தந்தது. புத்தகத்தை அச்சேற்றவே முடியாதோ என்ற எண்ணம் ஏற்பட்டது. தோட்டி என்ற சொல்லைத் தமிழில் எங்கேயாவது அச்சில் படித்திருக்கிறேனா என்று நினைவுபடுத்திப் பார்த்தேன். சட்டென்று எதுவும் நினைவுக்கு வரவில்லை. புத்தகம் வெளிவந்தால் தோழர்கள் துணிந்து படிப்பார்கள் என்று தோன்றிற்று. ‘தோட்டிகளும் தொழிலாளி வர்க்கம்தானே, தோழர்’ என்று ஜி. நாகராஜன் சொன்ன வாக்கியம் மிகுந்த ஆறுதலைத் தந்தது.

தொ. மு. சி. ரகுநாதனுடன் என் நட்பு நெருங்கியபோது ‘தோட்டியின் மகன்’ நாவலின் கையெழுத்துப் பிரதியை அவருக்குப் படிக்கத் தந்தேன். மொழிபெயர்த்து அப்போது இரண்டு மூன்று வருடங்களேனும் ஆகியிருந்தன. ஆனால் அது ஒரு சுமையாக என் மனதில் இருக்கவில்லை. தோட்டியைத் தமிழ் ஏற்றுக்கொள்ளச் சிலகாலம் காத்திருக்க நேர்வது இயற்கையாகவே தோன்றிற்று. ‘மொழிபெயர்ப்பு நன்றாக வந்திருப்பதாகவும் மேலும் திருத்தங்கள் செய்து முழுமைப்படுத்தலாம்’ என்றும் ரகுநாதன் கடிதம் எழுதிய தாக நினைவு. அதற்கு சில வருடங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து ‘சரஸ்வதி’ ஆசிரியர் நண்பர் வ. விஜயபாஸ்கரனின் கைக்கு என் கையெழுத்துப் பிரதி போயிற்று. அவர் கொடுத்தாரா, நான் வாங்கித் தந்தேனா என்பது நினைவில்லை. ‘சரஸ்வதி’ இதழில் என் பெயரில் சிறுகதைகள் வந்துகொண்டிருந்ததால் என். எஸ். ஆர். என்ற பெயரில் தோட்டியின் மகன் தொடர்கதையாக வெளியாயிற்று. மார்ச் 57இலிருந்து ஜூன் 58 வரையிலும். ‘தோட்டியின் மக’னை மொழிபெயர்த்த பின்பும் நான் காய்ந்த வயலோரம் ஒற்றையடிப் பாதையில் நடந்து போகும் சித்திரம் மனதில் வந்து கொண்டுதான் இருந்தது. புறக்காட்சிகளில் -தென்னைமரம் உட்பட - எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்றாலும் நடந்து போகும் என் கையில் அப்போது ஒரு புத்தகம் முளைத்திருந்தது. அந்தப் புத்தகத்தின் தலைப்பை நான் சொல்ல வேண்டியதில்லை.

‘தோட்டியின் மக’னை நான் மொழிபெயர்த்து ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டன. தமிழில் வெளியிடத் தகழி ஐம்பதுகளிலேயே உரிமையும் தந்திருந்தார். வெளியிடாமல் அசிரத்தையாக இருந்து விட்டேன் என்று சொல்லலாம். அசிரத்தைக்கும் நாம் உணராத காரணங்கள் இருக்கக் கூடும். மலையாளத்தில் ‘தோட்டியின் மகன்’ வெளிவந்த காலத்திலிருந்து தொடர்ந்து பேசப்பட்டுவரும் நாவல். மேடையிலும் எழுத்திலும். அங்கு நடந்த விவாதங்கள் என் நினைவில் இருக்கின்றன. ஆனால் ‘சரஸ்வதி’யில் இந்நாவல் தொடர்கதையாக வந்தபோது வாசகக் கவனத்தை இந்தத் தொடர் பெற்றதற்கான எந்த அடையாளமும் என்னிடம் வந்து சேரவில்லை. யாரும் இந்த நாவலைப் பற்றி இன்றுவரையிலும் எழுத்திலோ பேச்சிலோ குறிப்பிட்ட நினைவும் இல்லை. இருந்தாலும் காலம் மாறிக் கொண்டிருக்கிறது. தலித் இலக்கியம் தமிழில் உருவாகிக்கொண்டிருக்கிறது. தலித் இலக்கியத்தைப் படிக்கும் வாசகர்களும் தோன்றியிருக்கிறார்கள். திருநெல்வேலிச் சீமையிலிருந்து மாடுகள்போல் பிடித்துக்கொண்டு போகப்பட்ட இந்தத் தோட்டிகள் தலித் வாழ்க்கையின் அவலத்தை நம் மனதில் ஆழமாகப் பதியவைக்கின்றனர். தோட்டியின் மகன் இப்போது உண்மையாகவே புத்தக வடிவம் பெறுகிறது.

 
Top


Powered By Minveli © sundararamaswamy.com All Rights Reserved