| ஜே.ஜே சில குறிப்புகள் | பக்கம் 1 2 3 4 |
ஜோசப் ஜேம்ஸின் பிரச்சினைகள் சமகால வாழ்வில் கருத்துலகம் வகிக்கும் பங்கைப் பற்றிய நெருக்கடிகளைச் சார்ந்தவை. ஜே.ஜே.யே கருத்துக்களின் நடைமுறையாள னாகத் தான் அறிமுகமாகிறான். மனித வாழ்க்கையின் ஆதாரமான தேவைகளுக்கும் கருத்துக்களுக்குமான மோதலையே அவன் சந்திக்கிறான். வாழ்வு, சமூகம் ஆகியவை பற்றிய கருத்துக்களுடன் நெருங்கும் போது இந்தக் கருத்தாக்கங்களைப் பின்னொதுக்கிவிட்டு வாழ்வும் சமூகமும் பிறவும் அவற்றின் எதார்த்தச் சிக்கல்களுடன் பூதாகரமாக முன் நிற்கின்றன. அப்படியானால் மனித குலம் தோன்றிய நாள் முதல் எனது காலம் வரையில் சிந்தனைப் போக்குகள் பேணிக் கடைப்பிடித்துவந்த கருத்துக் களின் தேவையும் பங்கும் என்ன? சமூகத்துக்கான கருத்துருவாக்கத்தை ஓர் அமைப்பு ஏற்றுக் கொள்ள முடிகிறதா? தனிமனிதனால் சகஜீவிக்குக் கருத்தியல் ரீதியில் உத்தரவாதமளிக்க இயலுமா? அப்படி அளிக்கப் படும் உத்தரவாதத்தை அவன் ஏற்க மறுத்தால் என்ன செய்வது? திணிப்பதா? அந்தத் திணிப்பு அமைப்பின் அதிகாரத்தை அமல்படுத்துவது ஆகாதா? ‘இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு காரியத்தை மன ஒப்புதலோடு ஆற்ற வேண்டும். அல்லது இறந்து போய்விட வேண்டும். இரண்டும் எனக்குச் சாத்திய மில்லை. இதுதான் என் பிரச்சினை’ என்கிறான் ஜே.ஜே.
இருப்பு, நிகழ்வு, செயல்பாடு ஆகிய மூன்று நிலை களில் ஏற்படும் முரண் குறித்த பதற்றமே ஜே.ஜே.யை உலுக்குவது. உலுக்கலிலிருந்து விடுபட அவன் காணும் வழி இவற்றின் மீது போர்த்தப்படும் திரைகளைக் களைவது. முன்வைக்கப்படும் ஆயத்தத் தீர்வுகளை மறுப்பது. அடிப்படை சார்ந்த கேள்விகளை எழுப்புவது. இந்தக் கேள்விகள் நிரந்தரமானவை. பதில்கள் காலத்துக்குக் காலம் மாறுபவை. இந்தப் பொருளில்தான் ஜே.ஜே.வும் அவனை மையமாகக் கொண்ட நாவலும் நிகழ்காலத் தன்மை கொண்டவையாக நிலைபெறுகின்றன. அதுதான் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் புதிய வாசகர்களை ஈர்க்கவும் புதிய வாசிப்புகளுக்குத் தூண்டவும் இந்த நாவலைத் தகுதியுள்ளதாக்குகிறது என்று கருதுகிறேன்.
திருவனந்தபுரம் சுகுமாரன் 31 மே 2006
குறிப்புகள்
1 ஜே.ஜே: சில குறிப்புகள் (ஆறாம் பதிப்பு / காலச்சுவடு பதிப்பகம் / நாகர்கோயில் / 2004) பக்: 29
2 The Strange Case of Billy Biswas (Orient Paperbacks, New Delhi /1971)
3 அருண் ஜோஷி: 1939 - 93. ஆங்கிலத்தில் எழுதிய இந்திய எழுத்தாளர். ஐந்து நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. அதிகம் கவனிக்கப்படாமல் போன எழுத்து இவருடையது. சாகித்ய அக்காதெமி பரிசு பெற்றவர்.
4 ஜே.ஜே: சில குறிப்புகள் (முதல் பதிப்பு / க்ரியா / சென்னை - 1981) பக்: 7
5 ஆளுமைகள் மதிப்பீடுகள் - சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம் / நாகர்கோவில் - டிசம்பர் 2004) பக்: 356
6 இவன் என்டெ ப்ரிய சி.ஜெ - ரோஸி தாமஸ் (டிசி புக்ஸ், கோட்டயம் / 2005)
7 அன்வேஷணங்கள் - சி.ஜெ. தாமஸ் - தொகுப்பாளர்: கே.என். ஷாஜி. (நியோகம் புக்ஸ், கொச்சி / மே 2004) பக்: 109.
Top |


