Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com

Ninaivodai

ஜே.ஜே சில குறிப்புகள்    பக்கம் 1 2 3 4

ஜே.ஜே: சில குறிப்புகள் வெளிவந்த வேளையில் அந்த நாவல் இலக்கிய வாசிப்புக்கான பிரதி என்பது போலவே இலக்கிய அங்கீகாரத்துக்கான கையேடாகவும் இருந்தது. அதன் கணிசமான பகுதிகளை மனப்பாடமாகச் சொல்ல முடிந்திருந்தது. அதை ஓர் அங்கீகாரமாகவும் மனம் கொண்டாடியது. அன்று சீரிய இலக்கியச் சூழலில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்த பலரும் இந்தப் பயிற்சியை விளையாட்டாகவோ தீவிரமாகவோ மேற்கொண்டிருந்தார்கள் என்பது இன்று பெரும்பாலோர் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை.

சுந்தர ராமசாமியை முன்பே அறிவேன். ஆனாலும் அவருக்கு எழுதிய முதல் கடிதம் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலில் கண்ட ஒரு பிழையைக் குறிப்பிட்டு எழுதிய அஞ்சலட்டையாக இருந்தது. நாவல் பாத்திரமான பாலு தனது நோய்ப் படுக்கையில் கிடந்து வீணையின் மீட்டலாக வரும் இசையைப் பற்றிச் சொல்லும் பகுதியில் ‘லம்போதர’4 என்ற சங்கீத உருப்படியை ‘வர்ணம்’ என்று நாவலாசிரியர் எழுதியிருப்பார். அப்போது இசைப் பித்தம் முற்றியிருந்த தால் கீதத்தை வர்ணம் என்று எழுதிவிட்டீர்களே என்று சிணுங்கிக்கொண்டு கடிதம் எழுதியிருந்தேன். என்னைப் போலவே வேறு சிலரும் அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டி யிருக்கிறார்கள் என்றும் அடுத்த பதிப்பில் திருத்தப்படு மென்றும் தெரிவித்திருந்தார். அன்று பதிப்புத் துறை இருந்த நம்பகமற்ற சூழலில் அவருடைய வாக்குறுதி அடுத்த பிறவியில் நிறைவேறக்கூடும் என்றே எண்ணத் தோன்றியது. சீரிய இலக்கிய நூல்களின் விதியும் அவ்வாறாகத்தான் இருந்தது. ஆனால் ஜே.ஜே: சில குறிப்புகளின் காரியத்தில் விதிவிலக்காக நிகழ்ந்தது ஓர் அற்புதம். ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாக நாவல் இரண்டாம் பதிப்புக் கண்டது. ‘லம்போதர’ கீதம் என்று திருத்தமும் பெற்றிருந்தது. நான் சொல்லித் திருத்தம் செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லை. பலரும் அதைச் சுட்டிக்காட்டியிருந்திருக்கலாம். ஆனால் என் பொருட்டுத்தான் நாவலாசிரியர் அதை மேற் கொண்டார் என்ற அசட்டு மகிழ்ச்சி நாவலைப் படிக்கிற ஒவ்வொரு முறையும் மேலெழும். இன்றும்.

ஜே.ஜே: சில குறிப்புகள் நாவல் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான காலப் பகுதி புதிய சோதனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பக்குவப்பட்டிருந்தது. இருத்தலியல், நவ மார்க்சியம், அமைப்பியல்வாதம் முதலான பல சிந்தனைப் போக்குகளும் அலையெழுப்பிக்கொண்டிருந்தன. இந்த அலைகளின் வீச்சுக்கு ஈடு நிற்கும் திராணியுடன் உருவான நாவல் ஜே.ஜே:சில குறிப்புகள். அதன் உருவமும் செய்நேர்த்தியும் முன்னுதாரணமற்ற புதுமையைச் சார்ந் திருந்தன. ஒரு தனி மனிதனை முன்னிறுத்திக் காலத்தின் சிக்கல்களைப் பகுத்தறிய அந்நாவல் முற்பட்டது. இவ்விரு காரணங்களாலேயே முன்சொன்ன எல்லாவிதச் சிந்தனைப் போக்கிலிருந்தும் இந்த நாவல் அணுகப்பட்டிருந்தது.

சிற்றிதழ் சார்ந்த கலாச்சாரச் செயல்பாடுகள், ஆர்வலரின் நடவடிக்கை என்னும் நிலையையும் வாழ்வின் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் உளவியல் வினை என்ற நிலையையும் கடந்து கருத்துருவாக்கம் என்னும் அமைப்புப் பணியாக மாறியது எண்பதுகளில் எனக் கருதுகிறேன். அந்த மாற்றத்தின் எதிர் அதிர்வுகள் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை உருவாக்கியிருக்கின்றன. நாவலில் புலனாகும் அறிவார்ந்த தளத்துக்கான முகாந்திரம் இதுதான். எழுத்து, கலை, இசை, ஓவியம் என்று பண்பாட்டுச் செயல்பாடுகளில் எதார்த்த வாழ்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதன்மை கொண்ட கருத்தாடல் தான் நாவல் எதிர்கொள்ளும் சவால். கருத்துகளை உருவாக்குபவர்களும் நடைமுறைப்படுத்துபவர்களுமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் நாவலின் மையப் பாத்திரங்களாவதற்கான காரணமும் இதுதான். துரதிருஷ்ட வசமாக அந்தக் காலப் பகுதியில் இயங்கிய தமிழ் எழுத் தாளர்களோ கலைஞர்களோ பண்பாட்டுக் காவலர்களாக நட்சத்திர மதிப்புப் பெற்றிருக்கவில்லை. ஆனால் நாவலின் பின்புலமாகக் காட்டப்படும் மலையாள இலக்கிய உலகில் கருத்தை உருவாக்குபவர்களாக எழுத்தாளர்கள் உண்மை யாகவே போற்றப்பட்டனர். ஆக, நம்பகமான பின்னணியில் சமகாலத்தின் கோலங்களை நாவலாசிரியரால் பயமில்லா மல் விவாதிக்க முடிந்தது. இந்த அச்சமின்மைதான் அதன் வாசகரிடையே மாபெரும் வியப்பைப் படரவிட்டிருக்கிறது.

வெளிவந்து இரண்டரைப் பதிற்றாண்டுகளைக் கடந்திருக்கும் ஜே.ஜே: சில குறிப்புகள்தான் சமகால நாவல்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டது என்று கருதுகிறேன். நாவலாசிரியரின் கூற்றுப்படியே ஐம்பதுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, இன்றும் எழுதப்படு கின்றன. இனியும் எழுதப்படலாம். ஏறத்தாழ இவை அனைத்தும் ஒரே தொனியில் அமைந்தவை. பார்வையில் வேறுபாடுகள் கொண்டவையாகத் தோன்றினாலும் நோக்கத்தில் ஒரே தன்மை கொண்டவை. தாம் வரித்திருக் கும் கருத்து நிலையையட்டி நாவலைப் பற்றிய முன் முடிவுகளை உருவாக்கிக்கொண்ட பிறகு, அதற்கு ஏற்ப நாவல் இல்லை என்ற விமர்சன மதிப்பீட்டுக்கு அவற்றை எழுதியவர்கள் வந்து சேருகிறார்கள். தீர்ப்பை நிர்ணயித்த பின் நடத்தப்படும் விசாரணையின் தந்திரத்தை ஒத்திருக் கிறது இது.

நாவலின் கட்டமைப்பு பல இழைகளால் பின்னப்பட்டது. சமகாலத் தமிழ் வாழ்வின் மீது செல்வாக்குச் செலுத்தும் எல்லாக் கருத்தாக்கங்களிலிருந்தும் பகுக்கப்பட்ட இழைகள் வலைப்பின்னலை உருவாக்குகின்றன. முற்போக்குவாதத் தின் ஓர் இழை. நவீனத்துவத்தின் ஓர் இழை. தனித்தமிழ்ப் போக்கின் ஓர் இழை. பண்டித மனப்பாங்கின் ஓர் இழை. தனிமனிதவாதத்துக்கும் சமூக வாதத்துக்குமான ஒவ்வோர் இழைகள். இந்த ஒவ்வோர் இழையும் மற்றோர் இழையுடன் பின்னி முடிச்சிட்ட அமைப்பிலுள்ளது. எனக்குத் தோதான ஓர் இழையை அவிழ்த்தெடுக்கும்போது வலையின் இயல்பும் பயன்பாடும் எளிதில் குலைந்துபோகின்றன. ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை அணுகுவதிலுள்ள முதன்மையான சிக்கல் இதுவாகத் தோன்றுகிறது. பெரும் படைப்புகளின் இயல்பான இந்தத் துலக்கமின்மைதான் வாசகனைத் தொடர்ந்து வசீகரிக்கிறது. விமர்சகனைத் திணறச் செய்கிறது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுக் காலத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை வாசித் திருக்கிறேன். அதன் நடை பற்றிய எண்ணங்களே தொடர்ந்து என்னை ஆக்கிரமித்து வந்திருக்கின்றன. தமிழ்ப் புனைவெழுத்தில் நிகழ்ந்த உச்ச நடைகளில் ( grand style என்பதற்குச் சமமாக இந்தச் சொற்சேர்க்கையைப் பயன்படுத்துகிறேன்) ஒன்றாக நாவலின் நடையை வகைப் படுத்தலாம். இது மொழிசார்ந்த உத்தியல்ல. எழுதியவனின் கண்ணோட்டத்தையும் பரிவையும் சார்பையும் விலகலை யும் உள்ளடக்கிய ஒன்றாக அமைவது. பல தள இயக்கம் கொண்டது. பாதிப்புகளை உருவாக்கக்கூடியது. சிறுகதையில் இதன் துல்லியமான எடுத்துக்காட்டு புதுமைப்பித்தன் கதைகள். நாவலில் சமகால உதாரணம் ஜே.ஜே: சில குறிப்புகள். தொடர்ந்து வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவு மான படைப்பாகப் புதிய தலைமுறை வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்நாவல் நிலைத்திருப்பதும் இந்தக் காரணத்தாலேயே என்பது என் எண்ணம்.

“ஜே.ஜே: சில குறிப்புகள் மலையாளக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டதுதான். ஆனால் உண்மையில் அது தமிழ் கலாச்சாரம் சார்ந்து முன்வைக்கப்பட்ட விமர்சனம். தமிழ் வாழ்வின் சாரம் சார்ந்த ஒரு விமர்சனம்”5 என்று பிற்காலக் கட்டுரை யன்றில் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.

ஆரம்ப வாசிப்பில் ஜோசப் ஜேம்ஸ் என்ற பாத்திரம் மலையாள எழுத்தாளரான சி.ஜே. தாமஸை நினைவூட்டு வதாக நம்பியிருக்கிறேன். நாடக ஆசிரியரும் ஓவியரும் விமர்சகரும் சிந்தனையாளருமாக வாழ்ந்து மறைந்தவர் சி.ஜே. மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனையை முதன்மைப்படுத்தியவர்; நிறுவப்பட்ட கருத்துக்களுக்கு எதிரான கலகத்தையும் உருவாக்கியவர். அவரது மொழி மலையாள இலக்கியத்தில் புதிய தடங்களை ஏற்படுத்தியது. மறைக்கல்வி பயிலக் குடும்பத்தினரால் தூண்டப்பட்டவர். மடாலயப் படிப்பை உதறி வெளியில் இறங்கியவர். சி.ஜே.யும் அற்ப ஆயுளில் மறைந்தவர். நாற்பத்திரண்டாம் வயதில். சி.ஜே.யின் மரணத்துக்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது மனைவி ரோசி தாமஸ் ஒரு நினைவுக் குறிப்பை எழுதியிருந்தார். ‘இவன் என் பிரியமான சி.ஜே.’6 என்ற அந்தச் சிறு நூலை வாசிக்கும் சந்தர்ப்பத்திலும் சி.ஜே.தான் ஜே.ஜே.யா என்று மயங்கியதுண்டு. அந்த அளவுக்கு நம்பகமான தகவல்களுடன் பின்புலத்தை நிறுவ நாவலாசிரியர் அக்கறை கொண்டிருந்திருக்கிறார். சி.ஜே. தாமஸ் வாழ்க்கையின் நிஜம். ஜோசப் ஜேம்ஸ் புனைவின் உண்மை.

மலையாள இலக்கிய உலகில் ஜே.ஜே: சில குறிப்பு கள் நாவலுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் தமிழ் வாசகனான என்னை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. சி.ஜே. தாமஸ்தான் ஜே.ஜே. என்ற உரிமை பாராட்டலை அடக்கிய சிரிப்புடன் அவதானித்திருக்கிறேன். சி.ஜே. தாம ஸின் தொகுக்கப்படாத கட்டுரைகள் அடங்கிய நூலின் பின்னுரையில் அதன் தொகுப்பாளர் பின்வருமாறு குறிப்பிடு கிறார். ‘சி.ஜே. தாமஸைப் பற்றி ஒரு புத்தகம் எழுத மலையாளியால் முடியவில்லை. அதற்கு ஒரு தமிழர் வேண்டியிருந்தார்.’7 இதை ஓரளவுக்கு உண்மை என்றும் பெருமளவுக்குப் புனைவின் வெற்றி என்றும் காண்கிறேன்.

நவீன மலையாளக் கவிஞர்களில் ஒருவரான ஆற்றூர் ரவிவர்மா ஜே.ஜே: சில குறிப்புகளை மலை யாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிமாற்றம் செய்த முதல் நாவலும் இதுதான். அளவுக்கு மிஞ்சிய வடமொழிச் சொற்களால் பின்னப்படும் மலையாள நடையே இலக்கியத்தன்மை கொண்டது என்ற கருத்துக்குச் சவாலாக இருந்தது ஆற்றூரின் மொழி பெயர்ப்பு. தமிழுக்கும் மலையாளத்துக்கும் பொதுவான சொற்களையும் தமிழ் வாக்கிய அமைப்புகளையும் அப்படியே கையாண்டிருந்தார் ஆற்றூர். சுத்தமான மலையாள நடையல்ல; என்றாலும் புதிய ஒரு திராவிட நடை மலையாள இலக்கியத்துக்கு வாய்த்தது. புதிய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரிடம் இந்த நடையின் பாதிப்பைக் காணவும் முடிந்தது. நவீன கவிஞரும் விமர்சகருமான கல்பற்றா நாராயணன் சுந்தர ராமசாமி மறைவையட்டி எழுதிய அஞ்சலிக் குறிப்பில் இந்தப் பாதிப்பைப் பற்றிச் சுட்டிக்காட்டியிருந்தார். ஓர் அர்த்தத்தில் ‘ஜே.ஜே: சில குறிப்புக’ ளின் அறிமுகத்துக்குப் பின்னரே தமிழ் மொழியிலும் நவீனப் போக்குகள் உருவாகி வளர்ந்திருக்கின்றன என்று மலையாள இலக்கியவாதி களும் வாசகர்களும் நம்ப முன்வந்தார்கள். அதுவரை அவர்களும் ‘என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?’ என்ற குதர்க்கமான கேள்வியால் தமிழிலக்கியத்தைச் சீண்டிவிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜோசப் ஜேம்ஸை வரவேற்பதற்காக ஆற்றூர் ரவிவர்மா திறந்துவைத்த கதவுதான் இன்று புதிய தலைமுறையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் மலையாள இலக்கிய உலகில் பிரவேசிக்கவும் உதவுகிறது.


 
Top

 


Powered By Minveli © sundararamaswamy.com All Rights Reserved